அழுகி வரும் எலுமிச்சை பழங்கள்


அழுகி வரும் எலுமிச்சை பழங்கள்
x
தினத்தந்தி 23 Sept 2021 11:06 PM IST (Updated: 23 Sept 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை பகுதியில் தொடர்மழையால் எலுமிச்சை பழங்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பூண்டி, குச்சிபாளையம், சின்னப்பேட்டை, ரெட்டிக்குப்பம்  உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில்  புதுப்பேட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது. 
இதனால் எலுமிச்சை பழங்கள் மரங்களிலேயே அழுகி வீணாகி வருகிறது. மேலும் கரும்புள்ளி நோய் தாக்குதலால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அவர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக செலவு செய்து எலுமிச்சை மரங்களை பராமரித்து வருகிறோம். 

நஷ்டம்

தற்போது அமோக விளைச்சலை கொடுத்துவந்த நிலையில் தொடர் மழையால் ஏராளமான பழங்கள் அழுகி வீணாகி வருகிறது. அதனை விற்க முடியாததால் சாலையில் வீசி வருகிறோம். மேலும் நோய் தாக்குதலால் பழங்கள் சேதமடைந்து வருவதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி  உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, நோய் தாக்குதலில் இருந்து எலுமிச்சை பழங்களை பாதுகாக்க உரிய ஆலோசனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story