லோயர்கேம்ப் நீரேற்று நிலையத்தை வீடியோ எடுத்த அதிகாரிகள்
புதிய குடிநீர் திட்ட ஆய்வு பணிக்காக லோயர் கேம்ப் நீரேற்று நிலையத்தை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வீடியோ எடுத்தனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாற்றின் தலைமதகு பகுதியான லோயர்கேம்பில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து குழாய் மூலம் குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புதிய குடிநீர் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான ஆய்வு பணியில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி மதுரை மாநகராட்சி அலுவலக அதிகாரி ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று லோயர்கேம்ப் பகுதிக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தடுப்பணை, நீரேற்று நிலைய பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதுமட்டுமின்றி அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
இந்த ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் யாரும் உடன் வரவில்லை. லோயர்கேம்பில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ரகசியமாக மேற்கொண்டு வரும் ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வை முடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
Related Tags :
Next Story