3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை


3 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தாய் தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2021 11:16 PM IST (Updated: 23 Sept 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

வேலூரில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளின் கழுத்தை சேலையால் நெரித்து கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கணவன்,மனைவிதகராறு

வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 30), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜீவிதாவுக்கும் (23) கடந்த 6Ñ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அக்சயா (5), நந்தகுமார் (4) மற்றும் பெயரிடப்படாத 6 மாத ஆண்குழந்தை என்று 3 குழந்தைகள். தினேஷ் குடும்பத்துடன் சலவன்பேட்டை கச்சேரி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
தினேஷ் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும்போது மதுஅருந்திவிட்டு வருவதாகவும், அதனால் கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரத்தில் தினேஷ் குடிபோதையில் ஜீவிதாவை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பினார்

அதன்காரணமாக ஜீவிதா கோபித்து கொண்டு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் 2&வது தெருவில் வசிக்கும் தாய் கெஜலட்சுமி வீட்டிற்கு சென்றுவிடுவதும், சில நாட்களுக்கு பின்னர் அவர் சமாதானமாகி வீட்டிற்கு திரும்பி வருவதும் வழக்கம். 
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறால் ஜீவிதா கோபித்து விட்டு 3 குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரிடமும் சரியாக பேசாமல் மனவிரக்தியுடன் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜீவிதா, வாடகை வீட்டின் முன்பகுதியை பெருக்கி சுத்தம் செய்து, தண்ணீர் தெளிக்க வேண்டும். அதனால் அங்கு செல்கிறேன் என்று தாயாரிடம் கூறிவிட்டு குழந்தைகளுடன் நேற்று காலை 8.30 மணியளவில் சென்றுள்ளார். இதற்கிடையே தினேஷ் காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டார்.

குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை

கெஜலட்சுமி மாலை 5 மணியளவில் செல்போனில் ஜீவிதாவை தொடர்பு கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் எடுத்து பேசவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக தனது மகன் ஜெகதீஸ்வரனை தொடர்பு கொண்டு விரைவாக அக்கா வீட்டிற்கு சென்று பார்க்கும்படி தெரிவித்தார். அதையடுத்து அவர் அங்கு சென்றார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜெகதீஸ்வரன் கதவை வெகுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து அவர் ஜன்னல் வழியாக கதவின் உள்பக்க தாழ்பாளை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது, படுக்கையறையில் 6 மாத ஆண்குழந்தை உள்பட 3 குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தனர். அவர்களின் கழுத்தில் சேலை சுற்றப்பட்டிருந்தது. அதனை அகற்றி விட்டு ஜெகதீஸ்வரன் குழந்தைகளை தட்டி எழுப்பி பார்த்தார். 3 பேரும் சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஜீவிதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரன் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து தாயார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

அதன்பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். தகவலறிந்த வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சம்பவ இடத்துக்கு சென்று கெஜலட்சுமி, ஜெகதீஸ்வரன் மற்றும் வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார். 

அப்போது கெஜலட்சுமி, தினேஷ் குடித்து விட்டு தகராறு செய்து அடித்து உடைத்ததால் தனது மகள் மிகவும் விரக்தி அடைந்து காணப்பட்டாள். தினேசுடன் வாழ பிடிக்காமல் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து விட்டார் என்று கதறி அழுதபடி தெரிவித்தார். தினேஷ் செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டனர். செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார், 3 குழந்தைகள், ஜீவிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்த தினேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
குடும்ப தகராறில் 3 குழந்தைகளையும் கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story