தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை
தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபார்கள் செயல்படுவது குறித்து மதுபான கடை விற்பனையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும். அதன் அடிப்படையில் அரசு மதுபான கடைகள் மற்றும் தனியார் மதுபார்களில் மது விற்பனை செய்ய விதிமுறைகள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மதுபான கடைகளில் இருக்கும் மொத்த இருப்பை காட்டிலும் 50 சதவீதம் மிகாமல் மதுபானங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி விற்பனை ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற விற்பனையை விட 30 சதவீதத்திற்கு மேல் செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.
நடவடிக்கை
கடையில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களுக்கும் அதை வாங்கும் வாடிக்கையாளருக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. மதுபானங்கள் விற்பனை செய்வதை நாள்தோறும் பதிவேடுகளை மதுபானம் பெறுபவர்களின் விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மதுபான கடைகள் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அதற்கு மேல் இயங்க கூடாது.
மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், ஒரு உதவி விற்பனையாளர் கடையில் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் இருந்து விற்பனை தொகைகளை வங்கிக்கு எடுத்துச் செல்லும் போது முறையான ஆவணங்களை பூர்த்தி செய்து எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வழியில் ஆய்வு செய்யும்போது முறையான ஆவணங்களையும், அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
உள்ளூரில் உள்ள அரசியல் பிரமுகர்கள் அளிக்கும் கூப்பன் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானங்கள் வகைப்பாடு இருப்பு பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத், டாஸ்மாக் பொது மேலாளர் முருகன் மற்றும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story