பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது
ஆவூர் அருகே பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை, மகன்கள் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
ஆவூர்:
டீசல் திருட்டு
தஞ்சாவூரில் இருந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் மற்றும் இலுப்பூர் வழியாக மதுரைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் பைப்லைன் செல்கிறது. இதன் அருகே எரிவாயு குழாய் பதிப்பதற்கான வேலை தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது மண்டையூர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் பணி முடிந்தவுடன் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
வாகனங்களை பாதுகாக்கும் பணியில் மூர்த்தி (வயது 36) என்ற நபர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் உள்ள டீசல் டேங்கில் இருந்து அடிக்கடி டீசல் திருட்டு போவதாக வாகன டிரைவர்கள் புகார் கூறி வந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதையடுத்து நேற்று அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தில் இருந்து டீசலை திருடிக்கொண்டு 3 நபர்கள் செல்வதை அங்கு காவல் பணியில் இருந்த மூர்த்தி பார்த்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் டீசல் திருடிக் கொண்டு சென்ற 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள பேராம்பூர் கல்லுப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (52) மற்றும் அவரது மகன்கள் தேவராஜ் (22), பிரகாஷ் (19) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் உள்ள டீசல் டேங்கில் இருந்து டீசலை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 3 பேரையும் கைது செய்த மண்டையூர் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் அவர்களிடம் இருந்து 45 லிட்டர் டீசல், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
பணியிலிருந்து நீக்கப்பட்டவர்
மேலும் மண்டையூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தேவராஜ் ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன் பணியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்ததும், அப்போது அங்குள்ள வாகனங்களில் டீசல் திருட்டில் ஈடுபட்டதால் அவரை பணியிலிருந்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story