வாலிபரை அரிவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறிப்பு


வாலிபரை அரிவாளால் வெட்டி  பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2021 1:00 AM IST (Updated: 24 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு அருகே மோட்டார்சைக்கிளை வழிமறித்து வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணிடம் நகையை பறித்தவர்களை போலீசார் 8 கி.மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர்.

திருவையாறு:
திருவையாறு அருகே மோட்டார்சைக்கிளை வழிமறித்து வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணிடம் நகையை பறித்தவர்களை போலீசார் 8 கி.மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். 
அரிவாள் வெட்டு 
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே திருக்காட்டுப்பள்ளி புதுச்சத்திரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கப்பெருமாள். இவரது மகன் விஜயகுமார் (வயது24). இவர் நேற்று தனது உறவுக்கார பெண்ணுடன் மோட்டார்சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சைக்கு பனவெளி வழியாக வந்துகொண்டிருந்தார். 
அப்போது பனவெளி வெண்ணாற்று பாலம் அருகில் வந்தபோது, எதிரே ஸ்கூட்டரில் வந்த 2 வாலிபர்கள் வீச்சரிவாளுடன் விஜயகுமாரின் மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். அப்போது அவரை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த உறவுக்கார பெண் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தஞ்சைக்கு தப்பி சென்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
விரட்டி சென்று பிடித்தனர்
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் அனைத்து வாகன சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  பள்ளியக்ரஹாரம் ஐடியல் ஓட்டல் அருகில் உள்ள வாகன சோதனை சாவடியில் தலைமை காவலர் கலியராஜ், காவலர் முரளிதரன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துபணி தலைமை காவலர் நெடுஞ்செழியன், டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் தப்பி சென்ற 2 பேரை போலீசார் பார்த்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஜீப்பில் 8 கி.மீட்டர் தூரம் விரட்டி சென்று 8&ம் நம்பர் டவுன்கரம்பை என்ற இடத்தில் மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பறிமுதல் 
நடுக்காவேரி போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கும்பகோணம் மொட்டகோபுரம் பகுதியை  சேர்ந்த சுரேஷ் மகன் தினேஷ் (20), தாராசுரம் கடைவீதியை சேர்ந்த தர்மு மகன் பிரகாஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. 
இதுகுறித்து  விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த   இரண்டு அடி நீளமுள்ள வீச்சரிவாள், 1 பவுன் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வாலிபரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணிடம் நகையை பறித்து சென்றவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story