கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் கைது


கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2021 1:28 AM IST (Updated: 24 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பந்தட்டை:

தீ வைத்து கொளுத்த முயற்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் பஸ் நிறுத்தம் அருகே லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருப்பதற்காக தகரக் கொட்டகை அமைத்து, அதனை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் திடீரென அங்கு வந்து தேர் நிறுத்தப்பட்டிருந்த கொட்டகையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தேருக்கு தீ வைத்து கொளுத்த முயன்றார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று அந்த வாலிபரை பிடித்து வி.களத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் வாலிகண்டபுரத்தை சேர்ந்த காதர்கானின் மகன் முகமதுசலீம் (வயது 25) என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, முகமதுசலீமை கைது செய்த போலீசார், திருச்சியில் உள்ள தனியார் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தேரை தீ வைத்து கொளுத்த முயன்ற நபருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வி.களத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் திருச்சி மண்டல செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story