ஒன்றிய தி.மு.க. செயலாளர் உள்பட 2 பேருக்கு சிறை


ஒன்றிய தி.மு.க. செயலாளர் உள்பட 2 பேருக்கு சிறை
x
தினத்தந்தி 23 Sep 2021 7:58 PM GMT (Updated: 23 Sep 2021 7:58 PM GMT)

ஒன்றிய தி.மு.க. செயலாளர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

வங்கி கடன் பெற்றுத்தருவதாக...
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரை சேர்ந்த செங்கோல் ராஜமாணிக்கம் (வயது 84) என்பவருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு மினி லாரி வாங்க வங்கி கடன் பெற்றுத்தருவதாக எறையூரை சேர்ந்த அசோகன் (62) என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு வங்கியில் முன் பணமாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கட்ட வேண்டும் என்று அசோகன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஜமாணிக்கம் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தை அசோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அசோகன், பின்னர் ஓராண்டாகியும் கடன் பெற்றுத்தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை ராஜமாணிக்கம் திருப்பி கேட்டும், பணத்தை அசோகன் திருப்பி தராததால் ராஜமாணிக்கம் ஊர் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.
பணத்தை திருப்பி கொடுக்கவில்லை
இதையடுத்து சின்னாறு பயணியர் மாளிகையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாயத்து நடந்தது. அந்த பஞ்சாயத்தில் எறையூரை சேர்ந்த மதியழகன் (50) அசோகனுக்கு ஆதவாக ஆஜராகி ஒரு மாதத்தில் வாங்கிய பணத்தை அசோகன் திருப்பி கொடுத்து விடுவார் என்றும், அவ்வாறு அவர் கொடுக்கவில்லை எனில், தனது வீட்டை அடமானம் வைத்து கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி ரூ.50 பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளார்.
ஆனால் ஊர் பஞ்சாயத்தில் தெரிவித்தபடி அசோகன், மதியழகன் இருவரும் ராஜமாணிக்கத்துக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
தி.மு.க. செயலாளருக்கு சிறை
இதனால் 2001 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ராஜமாணிக்கம் புகார் செய்தார். இது தொடர்பாக அசோகன், மதியழகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், மதியழகனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பு வழங்கும்போது கோர்ட்டில் ஆஜராகாத மதியழகனுக்கு பிணையில் வர முடியாத வாரண்டு பிறப்பித்தார். இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மதியழகன் தற்போது வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story