அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருட்டு; 3 பேர் கைது
அரிசி அரவை ஆலையில் மின் மோட்டார் திருடியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சோழமாதேவியில் அரிசி அரவை ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சம்பவத்தன்று இரவு பணிகள் முடிவடைந்த நிலையில், அங்கு வேலை பார்க்கும் மிஷின் ஆபரேட்டர் மதியழகன், ஆலையை பூட்டி சாவியை உரிமையாளர் ராமலிங்கத்திடம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அவர் வழக்கம்போல் ஆலையை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர், ராமலிங்கத்திடம் தெரிவித்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து மதியழகன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்நிலையில் மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை மறித்து சோதனையிட்டபோது, அதில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட பழைய மின் மோட்டார் ஒன்று இருந்தது தெரியவந்தது. ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இது குறித்து சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சோதனைச் சாவடிக்கு வந்த சப்&இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் சிம்பு என்ற மணிவண்ணன்(வயது 30), தங்கசாமியின் மகன் ராஜேஷ் (26) மற்றும் கலியபெருமாள் மகன் வீரப்பன் (34) என்பது தெரியவந்தது.
மேலும் சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட மின்மோட்டார் சோழமாதேவி அரிசி அரவை ஆலையில் திருடப்பட்டது என்பதும், ராஜேசுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் அதனை கும்பகோணம் கொண்டு சென்று விற்பனை செய்ய முடிவு செய்து மதனத்தூர் சோதனைச்சாவடி வழியாக எடுத்துச் சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மின் மோட்டாரை திருடியதாக மணிவண்ணன், ராஜேஷ், வீரப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அவர்களை கைது செய்தார்.
Related Tags :
Next Story