ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை


ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை
x
தினத்தந்தி 24 Sept 2021 1:34 AM IST (Updated: 24 Sept 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை

சேலம், செப்.24-
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்து வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். 
கனகராஜ் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017&ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23&ந் தேதி இரவு நேர பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததோடு, எஸ்டேட்டிற்குள் நுழைந்து சில ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. 
இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உள்பட சிலர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே அந்த சம்பவம் நடந்த சில நாட்களில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
கொலை என குற்றச்சாட்டு
அதேசமயம், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் மற்றொருவரான சயான், தனது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயான் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து சயான் உள்பட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது சகோதரர் கனகராஜ் இறந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து அல்ல. திட்டமிட்ட கொலை, என்று குற்றச்சாட்டு தெரிவித்தார். மேலும், கனகராஜின் மனைவி கலைவாணியும் தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை என்றும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் கூறினார்.
மீண்டும் விசாரணை
ஏற்கனவே கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு விசாரணை ஆத்தூர் 1&வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து முடிந்தது.  இதற்கிடையே, கனகராஜின் குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் கோடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார் கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் சில நாட்களில் தனிப்படை போலீசார் சேலம் வந்து கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்ப நிலையில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story