தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sept 2021 1:39 AM IST (Updated: 24 Sept 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள்
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ&மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவ&மாணவிகளுக்கு போதிய கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் மாணவ&மாணவிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது இல்லை. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவ&மாணவிகள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-அர்ஜுன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.
குளம் போல் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை கிருஷ்ணன்புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாக்கடை, கால்வாய், சாலை உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைக்காலங்களில் இந்த பகுதியில் சாக்கடை நிரம்பி தெருவில் சாக்கடைநீர் குளம்போல் காட்சி அளிக்கிறது. துப்புரவு பணியாளர்கள் வாரம் ஒருமுறை கூட வருவதில்லை. இதனால் கொசுத்தொல்லையும் அதிகமாகி விட்டது. நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், அம்மாபேட்டை, சேலம்.

சேலம் மாநகராட்சி தாதம்பட்டி டவுன்சிப்பில் சாக்கடை கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.
ரா.சக்திவேல், சேலம்.

நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் பராமரிப்பு சீரமைக்கப்படாததால் கழிவு நீரானது 100 அடி தூரத்திற்கு தார் ரோட்டில் தேங்கி ஏரிபோல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ&மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய இருக்கிறது. நோய் பரவும் அபாயம் இருப்பதால் பலமுறை அதிகாரியிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர்பொதுமக்கள், கவுண்டம்பாளையம், நாமக்கல்.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையம், சின்ன அம்மாபாளையம், ஜாகீர் ரெட்டிபட்டி ஆகிய 3 ஊர்களை இணைக்கும் பகுதியில் குப்பை கூடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர அங்கு மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை ஆங்காங்கே வீசுகின்றனர். இதனால் அந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ராஜா, ஜாகீர் அம்மாபாளையம், சேலம்.
===
வேகத்தடை வேண்டும்
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி& ஜலகண்டாபுரம் சாலை கரிக்காப்பட்டி பஸ் நிலையம் அருகில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கி.சரவணன், சின்னப்பம்பட்டி.
===
பள்ளிக்கு சுற்றுச்சுவர் 
சேலம் மாவட்டம், கண்ணாமூச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் விளையாடவும், இறைவணக்க கூட்டம் நடத்தவும் இடவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் உரிய பாதுகாப்பு இன்றி உள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சண்முகசந்திரவேலன், கண்ணாமூச்சி, சேலம்.
===
பஸ் சேவை வேண்டும்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லவோ, நாமக்கல் நகருக்கு செல்லவோ 3 பஸ்கள் மாறி மாறி செல்ல வேண்டிய உள்ளது. எனவே வெண்ணந்தூரில் இருந்து நேரடியாக நாமக்கல்லுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்பட்டால் அந்த பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பகுதியில் பஸ்சேவை தொடங்க போக்குவரத்து துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷி.ஜான், குப்தாநகர், சேலம்.
===
உயர்கோபுர மின்விளக்கு இல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் களர்பதி ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. அந்த பகுதியில் இரவில் விஷ பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. எனவே அங்கு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-த.சிவன் சமத்துவபுரம்.
===
குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
சேலம் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின் ரோட்டில் குப்பைகள் அதிகமாக குவிந்துள்ளதால் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. குப்பைத் தொட்டி அருகில் குடியிருப்புகளும், பள்ளியும் உள்ளது. இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றம் மற்றும் கொசுக்களால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ஜெகதீஸ்வரன், தாதகாப்பட்டி, சேலம்.
===
மூடப்படாத ஆழ்துளை கிணறு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு 4 மாத காலமாக மூடப்படாமல் உள்ளது. இதன் அருகே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் குழந்தைகள், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். இதனை சரி செய்யுமாறு பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன் இந்த ஆழ்துளை கிணற்றை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்மக்கள், தர்மபுரி.
==
பயன்படாத குப்பை வண்டி
சேலம் ஆண்டிபட்டி பஞ்சாயத்து பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்துச் செல்ல துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை வண்டி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி ஒதுக்கப்பட்ட வண்டிகளில் ஒரு வண்டி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் அந்த வண்டி பழுதாகி உள்ளது. எனவே அந்த குப்பை வண்டி பழுதை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.
===
போலீசார் கவனத்துக்கு...
தர்மபுரி மாவட்டம் புறநகர் பஸ் நிலையம் உள்ளேயும், நகராட்சி கடைகளின் முன்பும் பொதுமக்களின் நடை பாதைகளிலும் விபசார அழகிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே இதுதொடர்பாக போலீசார் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&தமிழ்செல்வி, தர்மபுரி.
===

Next Story