திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
செம்பட்டு
மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, இங்கிருந்தும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கூரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு திருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்ப வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடைகொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரிய வந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 32) என்பதும், அவர் கொண்டுவந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், எட்டரை கோப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கும் சென்று சோதனை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றதாக தெரியவருகிறது.
Related Tags :
Next Story