ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்


ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
x
தினத்தந்தி 24 Sept 2021 1:50 AM IST (Updated: 24 Sept 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் கூறினார்.

நெல்லை:
தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந்தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகாந்தன் நேற்று நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். அவர், பாளையங்கோட்டை யூனியனுக்கான வாக்கு எண்ணும் மையமான பொன்னாக்குடி ரோஸ்மேரி கல்லூரிக்கு சென்று தேர்தல் பணிகளை ஆய்வு செய்தார்.மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

பின்னர் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. புகார்கள் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றதை ஆய்வு செய்தார். இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணு கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. நாளை (அதாவது இன்று) தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 9 வாக்கு எண்ணும் மையங்களிலும் போலீஸ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்கும் வகையில் சிறப்பு திட்டம் தயார் செய்துள்ளோம். தற்போது 1,500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேர்தல் நாட்களில் வாக்காளர்கள் அமைதியாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.

Next Story