இரு தரப்பினர் மோதல் கற்கள் வீச்சு; போலீசாருடன் தள்ளுமுள்ளு
இரு தரப்பினர் மோதல் கற்கள் வீச்சு; போலீசாருடன் தள்ளுமுள்ளு
ஓமலூர், செப்.24
ஓமலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக இரு தரப்பினர் மோதலில் கற்கள் வீசப்பட்டதுடன், போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண் போலீஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கணவாய் புதூர் ஊராட்சி மோரூர் பஸ் நிறுத்தம் அருகே கணவாய் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் அந்த இடத்தில் கடந்த 16&ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு தரப்பு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது குறித்து தகவல் அறிந்த காடையாம்பட்டி தாசில்தார் வாசுகி, ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் அனுமதி பெற்று தான் கொடிக்கம்பம் நட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
கொடிக்கம்பத்தை அகற்ற நோட்டீஸ்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கே.மோரூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள அனைத்து கட்சிக்கொடி கம்பங்களையும் ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பஸ் நிறுத்தம் அருகே கொடிக்கம்பம் அமைக்க முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவின்பேரில் கூடுதல் சூப்பிரண்டுகள் செல்வம், பாஸ்கர், துணை சூப்பிரண்டுகள் சங்கீதா, இளமாறன், சக்கரபாணி ஆகியோர் மேற்பார்வையில் கே.மோரூர் பஸ் நிறுத்தம் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், குமார், ஏராளமான போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்திற்கு வந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாவேந்தன், வசந்த், அர்ஜூனன், வேல்பாண்டி, அம்பேத்கர் நகர் பொதுமக்கள் மற்றும் கே.மோரூர் பகுதி மக்களிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அனைத்து கட்சி கொடிக்கம்பங்களையும் அகற்ற ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. முறைப்படி இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இருதரப்பினர் மோதல்
இதனிடையே திடீரென அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடிக்கம்பத்தை தூக்கிக்கொண்டு வேறு ஒரு இடத்தில் நடுவதற்கு ஓடினர். போலீசார் அவர்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கொடிக்கம்பத்தை நடுவதற்கு முயன்றனர். அப்போது கே.மோரூர் பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் சோடாபாட்டில், கற்களை வீசி தாக்கினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் எதிர்த்து கற்களை தாக்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகமானது.
இதை தடுக்க போலீசார் முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண் போலீஸ் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் போலீசார் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், அம்பேத்கர் நகர் பகுதி பொதுமக்கள் அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தீவட்டிப்பட்டி&பொம்மிடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 பேர் கைது
தொடர்ந்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் மறியலில் ஈடுபட்டதுடன், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து இரு தரப்பையும் சேர்ந்த 20&க்கும் மேற்பட்டோர் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி போர்க்களமாக காணப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story