போலீசார் பறிமுதல் செய்த ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு


போலீசார் பறிமுதல் செய்த ரூ.13 லட்சம் மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2021 2:34 AM IST (Updated: 24 Sept 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீசார் பறிமுதல் செய்த ரூ.13 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர்.

நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார், பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை முறைகேடாக கடத்தி விற்பனை செய்தவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த ஓராண்டில் மது கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பலரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 7 ஆயிரத்து 635 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் விசாரணைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிப்பதற்காக நேற்று அவற்றை லாரியில் ஏற்றிய மதுவிலக்கு போலீசார், நெல்லை ரெட்டியார்பட்டி மகிழ்ச்சி நகர் பகுதியில் உள்ள காலியிடத்துக்கு சென்றனர். அங்கு மதுபாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்தனர். தொடர்ந்து தாசில்தார் தாஸ் பிரியன் முன்னிலையில், மதுபாட்டில்கள் மீது ரோடு ரோலரை இயக்கி உடைத்து அழித்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதால், அங்கு மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

கோர்ட்டு அனுமதியுடன் மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்பிலான 7,635 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டதாக மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.



Next Story