கர்நாடக அரசு மீது சபாநாயகர் காகேரி கோபம்
பா.ஜனதா உறுப்பினர்கள் மீது சபாநாயகர் கடும் கோபமடைந்தார்.
பெங்களூரு: கர்நாடக அரசு மீது சபாநாயகர் காகேரி கடும் கோபமடைந்தார்.
கடும் கோபம்
கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் ஆளுங்கட்சி வரிசையில் முதல்-மந்திரி உள்பட பெரும்பாலான மந்திரிகள் ஆஜராகவில்லை. ஒரு சில மந்திரிகள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே ஆஜராகி இருந்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீமாநாயக், தனது தொகுதிக்கு நிதி ஒதுக்குவதில் அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.
அப்போது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் சிவலிங்கேகவுடா, ஏ.டி.ராமசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுந்து, ஆளுங்கட்சி வரிசையில் முதல்&மந்திரி உள்பட மந்திரிகளின் இருக்கைகள் காலியாக இருந்ததை சுட்டிக்காட்டி அதிருப்தியை வெளிப்படுத்தினர். அப்போது சபாநாயகர் காகேரி, மாநில அரசு மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசுகையில், “மந்திரிகள் மற்றும் உறுப்பினர்கள் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஆளுங்கட்சி வரிசையில் இருக்கைகள் காலியாக உள்ளன. மந்திரிகள் உள்பட உறுப்பினர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், சபையை எப்படி நடத்துவது“ என்று கூறி அரசு மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அறிவுறுத்த வேண்டும்
கர்நாடக சட்டசபையில் நேற்று நீர்ப்பாசனத்துறை தொடர்பாக ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று பேசினர். அப்போது யார் என்ன பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இதனால் கோபம் அடைந்த சபாநாயகர், “இப்படி அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசினால் எப்படி புரியும். ஒவ்வொருவராக பேசினால் தானே புரியும். உங்களை கேட்பவர்கள் யாரும் இல்லையா?. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும். உறுப்பினர்கள் ஒழுக்கமாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்களே கூறுங்கள்.
ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயாரித்து வைத்துள்ளேன். அதை வெளியிட வேண்டிய நிலை வரும். அதுகுறித்து இங்கு குறிப்பிட வேண்டாம் என்று நான் நினைத்தேன். மூன்ற கட்சிகளின் தலைவர்கள், இந்த சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story