பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்து 2 பேர் உடல் சிதறி பலி
பெங்களூருவில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 பலியானார்கள்.
பெங்களூரு: பெங்களூருவில் நடந்த பயங்கர வெடி விபத்தில் தமிழக வாலிபர் உள்பட உடல் சிதறி 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அத்துடன் 2 வீடுகளும், 6 வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன.
மர்ம பொருள் வெடித்தது
பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நியூ தரகு பேட்டை, ராயன் சர்க்கிளில் கணேஷ் பாபு என்பவருக்கு சொந்தமான டிரான்ஸ்போர்ட் குடோன் உள்ளது. இந்த குடோனையொட்டியே ஒரு பஞ்சர் கடை மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. நேற்று காலை 11.45 மணியளவில் குடோனில் உள்ள பொருட்களை சரக்கு ஆட்டோவில் எடுத்துச்செல்ல ஒரு வாலிபர் வந்திருந்தார். குடோனில் இருந்து பொருட்களை எடுத்து சரக்கு ஆட்டோவில் வைத்து கொண்டு இருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் அட்டை பெட்டியில் இருந்த மர்ம பொருள், வெடிகுண்டு வெடித்தது போன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. மர்ம பொருள் வெடித்ததால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. அங்கிருந்த பொருட்களில் தீயும் பிடித்து எரிந்தது. இதனால் குடோனில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறின.
2 பேர் சாவு
இந்த நிலையில், மர்ம பொருள் வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். அதாவது ஒருவரின் கை, கால்கள் துண்டு, துண்டாக சிதறி பலியாகி இருந்தார். மற்றொரு நபர் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்து உயிர் இழந்திருந்தார். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். வெடிகுண்டு வெடித்து தான் 2 பேர் பலியாகி இருப்பதாக முதலில் அப்பகுதியில் தகவல் பரவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வி.வி.புரம் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்
இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதிக்கு வெடிகுண்டு நிபுணர்கள், பெங்களூரு மேற்கு மண்டல சட்டம்&ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்து முகர்ஜி, தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பலியானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த மனோகர் (வயது 29) மற்றும் தரகு பேட்டையை சேர்ந்த அஸ்லாம் பாஷா (50) என்று தெரியவந்தது. இவர்களில், மனோகர் அதே பகுதியில் சிறிய அறை எடுத்து தங்கி சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அன்புசுவாமி, மஞ்சுநாத், கணபதி, ஜேம்ஸ் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையில், மர்ம பொருள் வெடித்ததில் அஸ்லாம் பாஷாவின் கடையில் நிறுத்தப்பட்டு இருந்த 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், குடோன் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ஆட்டோ நொறுங்கி சேதம் அடைந்திருந்தது. அத்துடன் அக்கம் பக்கத்தில் இருந்த 2 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும், வீட்டு சுவர்களிலும் சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
தடயவியல் நிபுணர்கள் விசாரணை
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், லாரி டிரான்ஸ்போர்ட் குடோனில் பட்டாசு வாங்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடோனில் இருந்த பட்டாசு வைத்திருந்த 60-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பஞ்சர் கடையில் இருந்த சிலிண்டர், கம்பரசர் மோட்டார் எதுவும் வெடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பட்டாசு வெடித்ததா?, வேறு ஏதேனும் வெடிப்பொருட்கள் வெடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கையின்படியே சரியான தகவல் தெரியவரும், என்றார்.
இதற்கிடையில், சம்பவம் நடந்த பகுதிக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினார்கள். மர்ம பொருள் வெடித்ததால் சேதமான இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், பிற பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர். பட்டாசு மட்டும் வெடித்திருந்தால், ஒரு நபர் உடல் சிதறி பலியாக வாய்ப்பில்லை என்றும், பிற வெடிப்பொருட்களும் வெடித்திருக்கலாம் என்பதால், அதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
60 பட்டாசு பெட்டிகள்...
இந்த நிலையில், தமிழ்நாடு சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து குடோனில் வைத்திருந்ததாகவும், அவ்வாறு வைக்கப்பட்டு இருந்த பட்டாசு பெட்டிகளில் 2 அல்லது 3 அட்டை பெட்டிகளில் இருந்த வெடிகள் வெடித்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. குடோனில் இருந்த பட்டாசுகள் இருந்த 60 அட்டை பெட்டிகள் வெடிக்காமல் அப்படியே இருந்தது. அந்த அட்டை பெட்டிகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெடிகளுடன், வேறு ஏதேனும் வெடிப்பொருட்கள் இருந்திருக்கலாம் என்றும், அதனால் தான் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story