நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி மாநில பஸ் ஒன்று நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் புகுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ் பள்ளத்தில் இறங்கியது
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சென்னைக்கு புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் அதிவிரைவு பஸ் ஒன்று மாமல்லபுரம் கிழக்குகடற்கரை சாலை வழியாக நேற்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருவிடந்தை என்ற இடத்தில் பஸ் சென்றபோது, அந்த வழியாக சைக்கிள் ஓட்டி சென்ற ஒருவர் மீது பஸ் எதிர்பாராத விதமாக உரசியது. இதில் நிலை தடுமாறிய அந்த வாலிபர் சாலையில் கீழே விழுந்தார். அப்போது சாலையில் விழுந்த வாலிபர் மீது பஸ் மோதல் இருக்க டிரைவர் பஸ்சின் பிரேக்கை வேகமாக அழுத்தி நிறுத்த முயன்றார். அதில் பஸ் நிலை தடுமாறி வலது புறத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கி மணலில் சிக்கி கொண்டது.
பயணிகள் உயிர்தப்பினர்
இதில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் இருக்கையில் இடிபட்டு காயமடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். குறிப்பாக பஸ் பள்ளத்தில் உள்ள மணலில் சிக்காமல் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது மோதியிருந்தால் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்றும், பஸ் டிரைவரின் சாதுர்ய திறமையால் விபத்து தவிர்க்கப்பட்டது என்றும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story