கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு - சென்னை கோர்ட்டு உத்தரவு
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னை புதுவண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல்கபார். இவரது மகளை, தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கோவையைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு கேட்டுள்ளார். அதற்கு அப்துல் கபார் மறுத்ததால் தனஞ்செயன் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 4 பேர் மீதும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய புது வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரும், விசாரணை அதிகாரியுமான ராஜசேகரன் (இவர், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்) ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் ஏ.டி.நாகேந்திரன், ‘இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் பாதுகாப்பு பணியில் இருப்பதால் அவரால் ஆஜராக இயலவில்லை’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆஜராகவில்லை. அவர், பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறும் காரணத்தை ஏற்க முடியாது’ எனக்கூறி அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
பின்னர், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story