கொரட்டூரில் சோகம்: 16-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை


கொரட்டூரில் சோகம்: 16-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2021 6:36 PM IST (Updated: 24 Sept 2021 6:36 PM IST)
t-max-icont-min-icon

தன்னைப்பற்றி தந்தையிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்ததால் வீட்டுக்கு சென்றால் தந்தை திட்டுவார் என பயந்து, 16-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரும் வசதி படைத்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

நேற்று மாலை 6 மணி அளவில் இங்குள்ள 16 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கொரட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், மாணவி ஒருவர் இறந்து கிடப்பது தெரிந்தது. விசாரணையில் அவர், அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த வைஜெயந்தி (வயது 16) என்பது தெரியவந்தது.

பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வைஜெயந்தி, கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த மளிகை கடைக்காரர் பாஸ்கரன் (38) என்பவருடைய மகள் என்பது தெரியவந்தது.

நேற்று காலை மாணவி குறித்து பள்ளி ஆசிரியர்கள் அவரது தந்தை பாஸ்கரிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதனால் வீட்டுக்கு சென்றால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில், மாணவி வைஜெயந்தி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல், தனது வீட்டுக்கு செல்லும் வழியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் சென்று 16-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் மாணவி நடந்து செல்லும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story