தாவரவியல் பூங்காவில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கும் பணி
தாவரவியல் பூங்காவில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கும் பணி
ஊட்டி
2-வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 12 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
2-வது சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசன் ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் அங்கு பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசிக்க ஆளில்லை.
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
2-வது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.
மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள், பூந்தொட்டிகளில் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது மலர் பாத்திகள், பூங்காவின் நுழைவுவாயில் உள்ளிட்ட பகுதிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால், பூங்காவே வண்ண மயமாக காட்சி அளிக்கிறது.
பூந்தொட்டிகளை அடுக்கும் பணி
இந்த நிலையில் நேற்று 2-வது சீசனை முன்னிட்டு மலர் மாடத்தில் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
டேலியா, சால்வியா, சென்டோரியா, மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்பட 120 ரகங்களை சேர்ந்த 12 ஆயிரம் பூந்தொட்டிகள் காட்சிக்கு அடுக்கி வைக்கப்படுகிறது. இந்த பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்ர மணியம், துணை இயக்குனர் குருமணி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
மேலும் 2 ஆயிரம் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு இன்று (சனிக்கிழமை) அல்லது நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு மாதம் சுற்றுலா பயணிகள் பார்வையிட திறக்கப்பட உள்ளது. மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story