பெருநகர சென்னை மாநகராட்சியில் 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி - நிறைவடைந்ததாக கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்


பெருநகர சென்னை மாநகராட்சியில் 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி - நிறைவடைந்ததாக கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 24 Sept 2021 7:21 PM IST (Updated: 24 Sept 2021 7:21 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சியில் 2,893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி முடிவுற்றதாக கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 695.31 கி.மீ. நீளமுள்ள 4 ஆயிரத்து 254 மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், 948 எண்ணிக்கையிலான மழைநீர் வடிகால்களில் சிறு பழுதுகளை சரிபார்த்து பராமரித்தல் மற்றும் 6 ஆயிரத்து 891 இடங்களில் உடைந்த நிலையில் உள்ள மனித நுழைவு வாயில் மூடிகளை மாற்றம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கண்ணன் காலனியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பழவந்தாங்கல் சுரங்கப்பாதையை பார்வையிட்டு பருவமழை காலத்தில் மழைநீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் ஆதம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் மற்றும் ஆதம்பாக்கம் வீராங்கல் ஓடை ஆகிய 2-ம் சேரும் இடம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வீராங்கல் ஓடை சேரும் இடம் ஆகிய பகுதிகளில் மிதக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், தூர்வாரும் பணிகளையும் விரைந்து மேற்கொண்டு பருவ மழைக்கு முன்னதாக முடிக்க உத்தரவிட்டார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை திட்டமிடப்பட்ட பணிகளில் 469.07 கி.மீ நீளமுள்ள 2 ஆயிரத்து 893 மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளும், 69 சிறு பழுதுகள் நீக்கும் பணியும், 722 இடங்களில் மனித நுழைவு வாயில் மூடிகளும் மாற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின்போது துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Next Story