போடியில் டீக்கடை தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு
போடியில் டீக்கடை தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
போடி:
போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி ஓம்சக்தி கோவில் அருகே வசிப்பவர் முருகன் (வயது 60). டீக்கடை தொழிலாளி. இவரது மனைவி நாகலட்சுமி (55) கேரளாவுக்கு தோட்ட வேலைக்கு சென்று வருகிறார். இவர்களது மகன் கண்ணன் என்ஜினீயரிங் படிப்பு முடித்துள்ளார். நேற்று முன்தினம் காலை முருகனும், நாகலட்சுமியும் வேலைக்கு சென்று விட்டனர். கண்ணன் சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நாகலட்சுமி வேலை முடிந்து மாலை 4 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. ஆனால் பீரோ உடைக்கப்பட வில்லை. பீரோ அருகிலும் வீட்டின் சில இடங்களிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. உடனே அவர் இதுகுறித்து போடி நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சரவணன், சப்&இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மர்மநபர்கள் பீரோவை திறக்க முயன்ற போது காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி இருப்பது தெரியவந்தது.
நாகலட்சுமி வழக்கமாக வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்கேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்துவிட்டு செல்வார். பீரோவை பூட்டி விட்டு சாவியை தன்னுடன் எடுத்து சென்று விடுவார். எனவே இது பற்றி தெரிந்த ஒருவர்தான் திருடி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story