பழனியில் 5 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்; அதிர்ச்சியில் மூதாட்டி சாவு


பழனியில் 5 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்; அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 24 Sept 2021 8:20 PM IST (Updated: 24 Sept 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் 5 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதில் தனது வீடும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழந்தார்.

பழனி:
பழனியில் 5 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதில் தனது வீடும் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழந்தார். 
5 வீடுகள் எரிந்தன
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டைமேடு தெரு, மதினாநகரில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர் காமாட்சி (வயது 90). இவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அவரது குடிசை வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது. மேலும் அந்த தீ மளமளவென எரிந்து, பக்கத்தில் இருக்கும் 4 ஓட்டு வீடுகளுக்கும் பரவியது. இதில் 5 வீடுகளும் தீப்பற்றி எரிந்தது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, குடிசை வீட்டுக்குள் இருந்த மூதாட்டி காமாட்சியை பத்திரமாக மீட்டனர். மேலும் மற்ற வீடுகளில் இருந்தவர்களும் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீடுகளில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து பழனி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீடுகளில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் 5 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. 
மூதாட்டி சாவு
தீவிபத்தில் தனது குடிசை எரிந்து போனதை பார்த்த மூதாட்டி காமாட்சி, அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் 5 வீடுகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதற்கிடையே தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்படும் என்றார். மேலும் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண நிதியை அவர் வழங்கினார். அப்போது பழனி நகராட்சி ஆணையாளர் கமலா, தாசில்தார் சசி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வழங்கினார்.

Next Story