தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்வத்ற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தும் கனிமொழி எம்.பி. பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்வத்ற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு ஏற்படுத்தும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை அரசு நிச்சயம் ஏற்படுத்தும் என தூத்துக்குடியில் நடந்த கருத்தரங்கத்தில் கனிமொழி எம்.பி கூறினார்.
கருத்தரங்கம்
நாட்டின் 75&வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் தூத்துக்குடி ஏ.வி.எம் கமலவேல் மகாலில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம்' என்ற பெயரில் ஏற்றுமதி கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சுவர்ணலதா வரவேற்றார். தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் ஜோ பிரகாஷ், தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் நேருபிரகாஷ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணை பொதுமேலாளர் சுந்தரேஷ்குமார், நெல்லை தொழில் வர்த்தக சங்கத்தை சேர்ந்த குணசிங் செல்லத்துரை ஆகியோர் பேசினர். மத்திய வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் அலுவலக துணை இயக்குனர் ஜே.முரளிதரன் ஏற்றுமதியாளர்கள் சங்கமத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்றுமதி சார்ந்த தொழில் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் ஏற்றுமதி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:
ஏற்ற சூழ்நிலை
புதுமையான தொழிலை கண்டுபிடித்து, அதனை ஆர்வத்தோடு செய்வதற்கான இடம் தூத்துக்குடி. இங்கிருந்து ஏராளமான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழில் வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடிக்கு பர்னிச்சர் பூங்கா, டைடல் பார்க் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் ஏற்கனவே உறுதியளித்து உள்ளார்.
எனவே, இங்கே இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு தொழில் முனைவோர் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தொழில் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை இந்த அரசு நிச்சயம் ஏற்படுத்தும். சுமார் 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்களுக்கு முதல்&அமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து உள்ளார். தமிழகத்தை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் புதிய தொழில்களை தொடங்க தி.மு.க அரசு துணை நிற்கும். சென்னைக்கு அடுத்ததாக தூத்துக்குடியில் தான் துறைமுகம், விமான நிலையம், ரெயில்வழித் தடம், சாலை இணைப்பு போன்ற அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
முன்மாதிரி மாவட்டம்
இந்தியாவில் ஏற்றுமதியில் தமிழகம் தற்போது 3&வது இடத்தில் இருக்கிறது. அதனை விரைவில் முதலிடத்துக்கு நாம் கொண்டுவர வேண்டும். அது தான் தமிழக அரசின் எண்ணமாக, பாதையாக இருக்கிறது. அதில் தூத்துக்குடி மிக முக்கியமான ஒரு இடத்தை பெற வேண்டும். முருங்கைக்காய் ஏற்றுமதி மண்டலமாக தூத்துக்குடி மாவட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று பர்னிச்சர் பார்க் விரைவில் தொடங்கப்பட உள்ளது. உணவு பூங்கா தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். முந்தைய தி.மு.க ஆட்சியில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது இங்கே உணவு பூங்காவை தொடங்கி வைத்தார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் அந்த உணவு பூங்கா மீண்டும் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியை நாட்டுக்கே முன்மாதிரி மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம். மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு போல மேக் இன் தூத்துக்குடி என்பதையும் நிலை நிறுத்தி காட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகள், தொழில் முனைவோர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய துணை பொதுமேலாளர் சார்லஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story