தொப்பம்பட்டியில் இருந்து 22 டன் தேங்காய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி


தொப்பம்பட்டியில் இருந்து 22 டன் தேங்காய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
x
தினத்தந்தி 24 Sept 2021 9:50 PM IST (Updated: 24 Sept 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே தொப்பம்பட்டியில் இருந்து 22 டன் தேங்காய் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். இந்த முறை விவசாயத்தில் ரசாயன உரம், பூச்சி மருந்து போன்றவை பயன்படுத்தப்படுவது இல்லை. இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் விளைபொருட்கள் உடல்நலத்துக்கு நன்மை அளிப்பதால், நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இயற்கை விவசாய பொருட்களை அடையாளம் காணும் வகையில் விதைச்சான்று அலுவலகம் மூலம் அங்கக சான்று வழங்கப்படுகிறது. இதற்கு சிறு, குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 700&ம், இதர விவசாயிகள் ரூ.3 ஆயிரத்து 200&ம், விவசாய குழுக்கள் ரூ.7 ஆயிரத்து 200&ம், வணிக நிறுவனங்கள் ரூ.9 ஆயிரத்து 400&ம் செலுத்த வேண்டும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 70 விவசாயிகள், 10 விவசாய குழுக்கள், 3 வணிக நிறுவனங்கள் அங்கக சான்று பெற்றுள்ளனர். இதன்மூலம் இயற்கை விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை எளிதாக ஏற்றுமதி செய்யலாம். 
அதன்படி தொப்பம்பட்டியை அடுத்த கோட்டத்துறையை சேர்ந்த விவசாயி மோகன்குமார் அங்கக சான்று பெற்று தென்னை, நெல்லி பயிரிட்டு உள்ளார். அதன்மூலம் கடந்த 6 மாதங்களில் 22 டன் தேங்காயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தார். அதன்மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளது. அதேபோல் காபி, மா, முருங்கை, மிளகு, கொய்யா, மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு அங்கக சான்று பெற்றால் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். எனவே இயற்கை விவசாயிகள் அங்கக சான்று பெறுவதற்கு முன்வர வேண்டும் என்று விதைசான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் வரதராஜன் தெரிவித்துள்ளார். 

Next Story