தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Sept 2021 10:05 PM IST (Updated: 24 Sept 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு 
வேகத்தடைக்கு வர்ணம்

தென்காசி மாவட்டம் கடையத்தில் மெயின்ரோட்டில் 2 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பூசப்பட்டிருந்த வர்ணம் அழிந்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுபற்றி கடந்த 9&ந்தேதி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் `வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும்' என்ற தலைப்பில் வாசகர் திருக்குமரன் அனுப்பிய பதிவு வெளியானது. இதன் பயனாக தற்போது வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
-----------
குடிநீர் குழாயில் உடைப்பு

நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல்குளம் ரோட்டில் தேவி கருமாரியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும்போது இவ்வாறு தண்ணீர் வெளியேறி அந்த பகுதியில் தேங்கி விடுகிறது. எனவே, இதில் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுகிறேன்.
-தங்கராஜா, திருப்பணி கரிசல்குளம்.
---------------------------------
குண்டும், குழியுமான சாலை

 நெல்லை தச்சநல்லூர் சந்தி மரித்த அம்மன் கோவிலில் இருந்து ராமையன்பட்டி வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களுக்கு செல்கின்றன. சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மழைபெய்யும்போது அதில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
-மாணிக்கவாசகம், பெருமாள்புரம்.
--------------------------
முட்புதர்கள் சூழ்ந்த பயணிகள் நிழற்குடை 

இடையன்குடியில் இருந்து குட்டம் செல்லும் வழியில் கடகுளம் விலக்கு பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாதபடி கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் சூழ்ந்து விட்டன. இதனால் மழை, வெயிலிலும்கூட நிழற்குடையில் நின்று பயணிகள் பஸ் ஏற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே பயணிகள் நிழற்குடையை சரி செய்து தருமாறு வேண்டுகிறேன்.
-ராஜா, கடகுளம்.
----------------------------
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குளக்கட்டாகுறிச்சி, நடுவப்பட்டி, மைப்பாறை, முக்குட்டுமலை, கஸ்தூரிரங்காபுரம், பூம்பாறை பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். அவசர மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவேங்கடத்திற்கோ அல்லது 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கழுகுமலைக்கோ செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நடுப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்கள் பயன் பெறுவார்கள்.
-ஆனந்தராஜ், குளக்கட்டாகுறிச்சி.
-----------------------------------
தெருவில் தேங்கும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புல்லுக்காட்டுவலசை 8-வது வார்டில் உள்ள தெருவில் வீடுகளின் முன் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-அருண், புல்லுக்காட்டுவலசை.
------------------------------
புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை கிராமத்தில் சாத்தான்குளம்&திருச்செந்தூர் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்றது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் கடந்த 15-ந்தேதி `வீணாகும் குடிநீர்' என்ற தலைப்பில் வாசகர் மாடசாமி அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைப்பை சரி செய்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி' க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
-----------------------
 
ரோடு சீரமைக்கப்படுமா?

கோவில்பட்டி நகராட்சி வார்டு எண்-14 ல் உள்ள காளியப்பர் தெருவில் உள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. பல ஆண்டுகளாக இந்த ரோடு சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால் முதியோர்கள் உள்பட பலர் அந்த வழியாக செல்லும்போது தவறி விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சவுமியா, கோவில்பட்டி.
------------------------------


Next Story