பையூரில் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட உள்ள பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்:
முதல்-அமைச்சர் அறிவிப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன் கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் நவம்பர்¢ மாதம் முதல் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ளது. அங்கு நவம்பர் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
கலெக்டர் நேரில் ஆய்வு
கல்லூரி செயல்படுவதற்கு தேவையான நிர்வாக அலுவலகம், வகுப்பறை, ஆய்வுக்கூடங்கள், உணவுக்கூடம், மாணவ&மாணவிகள் தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாடங்கள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, தோட்டக்கலை கல்லூரி நிர்வாக அலுவலர் ஜீவஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியரும், தலைவருமான பரசுராமன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story