எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்தல் பணி செய்யுங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை


எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் தேர்தல் பணி செய்யுங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 24 Sept 2021 10:40 PM IST (Updated: 24 Sept 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

எந்தவித புகாருக்கும் இடமளிக்காதவாறு நடுநிலையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 9, 276 பேர் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டார். அப்போது அவர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசியதாவது:-

முன்னேற்பாடு பணிகள்

தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முகப்புச்சீட்டு, முகவர் சீட்டு போன்றவற்றை மிக கவனமாக பார்க்க வேண்டும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முதல் நாளே

 வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், ஆவணங்கள் மற்றும் உரிய படிவங்கள் வரப்பெற்றதை உறுதிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், முகவர்களுக்கு வாக்குப்பெட்டியை திறந்து காண்பித்து

 காலியாக உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் முடித்திட வேண்டும்.


ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 பதவியிடங்களுக்கான வாக்குச்சீட்டுகளும் தனித்தனியாக 4 வண்ணங்களில் பயன்படுத்துவதால் கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

தேர்தல் பயிற்சி பெறும் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி கையேட்டினை படித்து தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும், அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அவ்வப்போது கைகழுவும் திரவத்தை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.


நடுநிலையுடன் பணியாற்ற

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு செலுத்தாதவர்கள் சுகாதாரத்துறை சார்பில் தேர்தல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடுநிலையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story