கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு


கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2021 5:25 PM GMT (Updated: 24 Sep 2021 5:25 PM GMT)

வேட்பு மனு தள்ளுபடி செய்ததை கண்டித்து கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பரமநத்தம் ஊராட்சியில் கல்லேரிகுப்பம், ரோடு பரமநத்தம் ஆகிய கிராமங்கள் உள்ளன. பரமநத்தம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ரோடு பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தள்ளுபடி செய்ததை கண்டித்து நேற்று காலை கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் வேட்பாளர் அனிதா சக்திவேல் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து மூரார்பாளையத்தில் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் வேட்பாளர் அனிதாசக்திவேல் மற்றும் கிராமமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ்  சூப்பிரண்டு கங்காதரன், சங்கராபுரம் தாசில்தார் பாண்டியன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோக செய்தனர். சாலை மறியல் காரணமாக கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story