மாவட்ட செய்திகள்

விருத்தாசலம் காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனை + "||" + Farmer sentenced to death in love couple homicide case

விருத்தாசலம் காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனை

விருத்தாசலம் காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனை
விருத்தாசலம் காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு தூக்கு தண்டனையும், போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் கடலூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
கடலூர், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முருகேசன் (வயது 25). என்ஜினீயரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (68) மகள் கண்ணகி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி கடந்த 5.5.2003 அன்று பெற்றோருக்கு தெரியாமல், கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் காதல் திருமணம் பற்றி பெற்றோரிடம் தெரிவிக்காமல் அலைபாயுதே சினிமா பட பாணியில் அவரவர் வீடுகளுக்கு சென்று தனித்தனியாக வசித்து வந்தனர். அவ்வப்போது தனிமையிலும் சந்தித்து பேசி வந்தனர்.

சித்ரவதை

இந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது பற்றி உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனால் முருகேசன், கண்ணகியை அழைத்து சென்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தார். பின்னர் முருகேசன், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய கண்ணகியை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலம் முருகேசன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் 7.7.2003 அன்று முருகேசனை பிடித்து, கண்ணகி இருக்கும் இடம் பற்றி கேட்டனர். ஆனால் அவர் கண்ணகி இருக்கும் இடத்தை பற்றி தெரிவிக்காததால், அவரை சரமாரியாக தாக்கி காலில் கயிற்றை கட்டி கிணற்றில் தலைகீழாக தொங்க விட்டு கடும் சித்ரவதை செய்தனர்.

காதில் விஷம் ஊற்றி கொலை

இதில் உயிர் பயத்தில் இருந்த முருகேசன், கண்ணகி இருக்கும் இடத்தை பற்றி துரைசாமி மற்றும் அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து துரைசாமி, அவரது மகன் விவசாயி மருதபாண்டியன் (49) மற்றும் உறவினர்கள் காரில் முருகேசனை அழைத்துக் கொண்டு மூங்கில்துறைப்பட்டு சென்றனர். பின்னர் அங்கு உறவினர் வீட்டில் இருந்த கண்ணகியை, புதுக்கூரைப்பேட்டைக்கு அழைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து 8.7.2003 அன்று முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகில் உள்ள சுடுகாட்டுக்கு இருவரது உறவினர்களும் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து இருவரது கை, கால்களையும் கட்டி, அடித்து உதைத்தனர். பின்னர் கிராம மக்கள் முன்னிலையில் அவர்களது ஆடைகளை அவிழ்த்து, காது மற்றும் வாய் வழியாக விஷத்தை ஊற்றினர். இதில் முருகேசன், கண்ணகி ஆகிய 2 பேரும் துடிதுடித்து இறந்தனர். இதையடுத்து இருவரது உடல்களையும் அவர்களது உறவினர்கள் தூக்கிச் சென்று தனித்தனியாக எரித்தனர்.

8 பேர் கைது

இதை அறிந்தும் அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்&இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கிடையே காதல் ஜோடியை ஆணவ கொலை செய்தது தொடர்பாக 10 நாட்களுக்கு பிறகு 17.7.2003 அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி, தமிழகத்தையே உலுக்கியது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காதல் ஜோடி ஆணவக் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். அதன்பேரில் முருகேசன் உறவினர்கள் 4 பேரையும், கண்ணகி உறவினர்கள் 4 பேரையும் விருத்தாசலம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் முருகேசன் தந்தை சாமிக்கண்ணு மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த கொலை சாதி ஆணவத்தில் நடந்தது என்றும், அதனால் இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தூக்கு தண்டனை

அதன்பேரில் இந்த வழக்கு 2004-ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 9.3.2009 அன்று கடலூர் கோர்ட்டில் சி.பி.ஐ. 660 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 
அதில் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக அப்போதைய விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோரையும் குற்றவாளியாக சேர்த்தது. இதனால் இவ்வழக்கில் போலீசார் 2 பேர் மற்றும் துரைசாமி, மருதபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, குணசேகரன் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து இந்த வழக்கு கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் 81 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. 
அதன்படி நீதிபதி உத்தமராசா தனது தீர்ப்பில், முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதபாண்டியனை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும், ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த தூக்கு தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகு, நிறைவேற்றப்படும் என்றார்.

12 பேருக்கு ஆயுள்

தொடர்ந்து கண்ணகியின் தந்தை துரைசாமி, உறவினர்கள் ரங்கசாமி(45), கந்தவேலு(54), ஜோதி(53), வெங்கடேசன்(55), மணி(66), தனவேல் (49), அஞ்சாப்புலி (47), ராமதாஸ் (52), சின்னதுரை (62) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் அபராதமும், செல்லமுத்து(66), தமிழ்மாறன்(51) ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் தலா ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் செல்லமுத்து, தமிழ்மாறன் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் ரூபாயை முருகேசனின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு கூறினார். 
இதுதவிர இவ்வழக்கில் அய்யாசாமி, குணசேகரன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக தனது தீர்ப்பில் கூறியிருந்தார். 
இவ்வழக்கில் சி.பி.ஐ. சார்பில் அரசு வக்கீல் டோமினிக் விஜய் ஆஜராகி வாதாடினார்.

போலீஸ் குவிப்பு

இவ்வழக்கு தொடர்பாக கடலூர் கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செல்லமுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், சப்&இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் கோர்ட்டு விவசாயிக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.