வேலூரில் வீட்டில் வாடகைக்கு வருவதாக கூறி ரூ.1 லட்சம் நூதன மோசடி
வேலூரில் வீட்டில் வாடகைக்கு வருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
வேலூர்
வேலூரில் வீட்டில் வாடகைக்கு வருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ஆன்லைன் விளம்பரம்
வேலூரை சேர்ந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விடுவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்திருந்தார். மேலும் அதில் அவரது செல்போன் எண், வீட்டின் படங்கள் போன்றவற்றை வெளியிட்டிருந்தார். இதனை ஆன்லைனில் பார்த்த மர்மநபர் ஒருவர் வாலிபரை தொடர்பு கொண்டார். அவர் தன்னை மத்திய தொழில் பாதுகாப்பு படையில் அலுவலராக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், வேலூரில் வீடு வாடகைக்கு தேவைப்படுகிறது. உங்கள் வீடு இருக்கும் இடம், வீடு ஆகியவை தனக்கு பிடித்து உள்ளதாக தெரிவித்தார்.
இதனை நம்பி வாலிபரும் அவரிடம் வீட்டு வாடகை குறித்த விவரங்களை தெரிவித்தார். அப்போது அந்த நபர் தன்னுடைய செல்போன் எண் (கூகுள்பே) உள்ள வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தினால் நான் அட்வான்ஸ் பணத்தை செலுத்தி விடுகிறேன் என கூறினார்.
வங்கிக் கணக்கில்...
இதனை நம்பிய வாலிபர் செல்போன் எண் கணக்கில் ஒரு ரூபாய் போட்டார். அதனை அந்த நபர் திருப்பி அனுப்பி வைத்தார். மீண்டும் வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர் ரூ.50 ஆயிரம் போடுங்கள் எனது வங்கிக் கணக்கில் கோளாறு உள்ளது. நீங்கள் பணம் போட்டால் அது சரியாகி விடும். அதன் பிறகு நான் உங்களுக்கு திருப்பி அனுப்பி விடுவேன் எனக் கூறினார்.
அதன்படி, வாலிபர் மர்மநபர் அளித்த செல்போன் எண் கணக்கில் ரூ.50 ஆயிரம் செலுத்தினார். மர்ம நபரை தொடர்பு கொண்டு பணம் போட்டது பற்றி கூறினார். அப்போது மர்மநபர் நீங்கள் அனுப்பிய பணம் எதுவும் எனக்கு வரவில்லை. எனவே மீண்டும் ரூ.49,999 அனுப்பி வையுங்கள். எனது வங்கிக் கணக்கு சரியாகிவிடும் என்றார். இதனால் வாலிபர் மீண்டும் ரூ.49,999 அனுப்பினார்.
ரூ.1 லட்சம் மோசடி
இதுபற்றி விவரத்தைக் கூறியதும், மர்மநபர் மீண்டும் நீங்கள் அனுப்பிய பணம் எனக்கு வரவே இல்லை என கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டார். அப்போதுதான் அந்த வாலிபருக்கு ரூ.1 லட்சம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் அளித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட செல்போன் எண் மூலம் மர்ம நபர்குறித்து விசாரண நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story