வால்பாறை வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகளை தடுக்க நடவடிக்கை
வால்பாறைவனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகளை தடுக்க நடவடிக்கை
வால்பாறை
வால்பாறையில் வனப்பகுதிக்குள் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வால்பாறை சுற்றுலா மையங்கள்
மலைப்பிரதேசமான வால்பாறையில் கூழாங்கல் ஆறு, 9-வது கொண்டை ஊசி வளைவு காட்சிமுனை, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை உள்பட பல்வேறு சுற்றுலா மையங்கள் உள்ளன.
இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை காட்சிகளை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். ஆனால் இங்கு சுற்றலா பயணிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் என்பது மிகவும் குறைவாகதான் இருக்கிறது.
குறிப்பாக சுற்றுலா தகவல் மையம் இல்லை. அத்துடன் சுற்றுலா மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஊழியர்களோ அல்லது போலீசாரோ இல்லை. இதன் காரணமாக அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அத்துமீறல்
குறிப்பாக சோலையாறு அணை பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் இறங்கி செல்பி, புகைப்படம் எடுக்கிறார்கள். தற்போது அணை நிரம்பி வழிகிறது. தவறி உள்ளே விழுந்தால் தப்பவே முடியாது. அதுபோன்று சேடல் டேம் ஆறு பகுதிக்கு செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் தடையை மீறும் சுற்றுலா பயணிகள் அந்த ஆற்றுக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சியின் அருகே அத்துமீறி குளிப்பதுடன், செல்பியும் எடுத்து வருகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை நீடித்து வருகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சேடல்டேம் ஆறு
சோலையாறு அணைக்கு செல்லும் வழியில் 13 கி.மீ. தூரம் அணையை ஒட்டிதான் சாலை செல்கிறது. இதனால் அதன் அருகே வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணிகள் அணைக்குள் அத்துமீறி இறங்குகிறார்கள். அந்த இடத்தில் குறைந்தது 70 அடி ஆழம் இருக்கும். ஆனால் அதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்வது இல்லை.
மேலும் சேடல்டேம் ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளித்த பயிற்சி டாக்டர் அடித்துச்செல்லப்பட்டார். ஆனால் இதுவரை அவர் என்ன ஆனார் என்பது கூட தெரியவில்லை. அதுபோன்று இங்கு வருபவர்கள் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் போன்றவற்றை சாலையோரத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் தூக்கி எறிகிறார்கள்.
உடனடி நடவடிக்கை
இதன் காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அதுபோன்று சுற்றுலா மையங்களுக்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்திவிட்டு சிலர், வனப்பகுதிக்குள் செல்வதால் வனவிலங்குகள் தாக்கக்கூடிய சம்பவங்களும் நடந்து வருகிறது.
சுற்றுலா மையங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க எந்த ஊழியர்களும் இல்லாததால் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சுற்றுலா மையங்களில் கண்காணிப்பு ஊழியர்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ஏ.டி.எம். வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story