கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கல்லார்குடி மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி
கல்லார்குடி மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி வனத்துறை அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலைவாழ் மக்கள்
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வால்பாறை கல்லார்குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் தெப்பக்குள மேட்டில் மாற்று இடம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் கல்லார்குடி மக்களுக்கு தெப்பக்குள மேட்டில் மாற்று இடம் வழங்க பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக வெளியீட்டு செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அனைத்து கட்சியினர் கூறியதாவது:-
அறவழி போராட்டம்
கடந்த 3 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வால்பாறை கல்லார்குடியில் குடிசைகளை அகற்றியதோடு, மாற்று இடம் தருவதாக கூறி தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் மலைவாழ் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பாராம்பரிய உரிமைப்படி தெப்பக்குள மேட்டில் உடனடியாக இடம் வழங்க வேண்டும். தற்காலிக குடியிருப்பில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வருகிற 2-ந்தேதி கல்லார்குடியில் மாபெரும் அறவழி போராட்டம் நடத்த உள்ளனர். அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக தெப்பக்குள மேட்டில் இடம் வழங்க வேண்டும். இல்லையெனில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story