13 ரெயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா
13 ரெயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு கூறினார்.
காரைக்குடி,
13 ரெயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு கூறினார்.
சுத்தமான ரெயில், சுத்தமான இந்தியா
தென்னக ரெயில்வே துறை சார்பில் சுத்தமான ரெயில், சுத்தமான இந்தியா என்ற நிகழ்ச்சி கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு கலந்துகொண்டு ரெயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுத்தம் என்பது நாட்டிற்கும், வீட்டிற்கும் அவசியமான ஒன்றாகும். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதுதவிர ரெயிலில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் அவர்கள் ரெயில் பயணத்தின் போது பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறோம். மேலும் பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அடங்கிய பைகளை பாதுகாப்பாக ரெயிலில் சங்கிலி மூலம் எவ்வாறு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
அறிவுரை
நகைகள் அணிந்து வரும் பெண்கள் ரெயிலில் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது என்பது உள்ளிட்டவைகளையும் அவ்வப்போது ரெயில்வே போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மதுரை ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட 3 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 13 ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், நமது உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனர் டாக்டர் பிரகாஷ் மற்றும் ரெயில்வே போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story