சிவகாசியில் விட்டு, விட்டு பெய்யும் மழை; பட்டாசு உற்பத்தி பாதிப்பு
சிவகாசி பகுதியில் விட்டு, விட்டு பெய்யும் மழையினால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் விட்டு, விட்டு பெய்யும் மழையினால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பட்டாசு ஆலைகள்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பல கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் சிவகாசி பகுதியில் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் டெல்லி அரசு பட்டாசு விற்க, வெடிக்க, சேமித்து வைக்க திடீர் தடை விதித்தது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள 80 கிலோ மீட்டர் பரப்பளவில் பட்டாசு விற்பனை செய்து வந்த வியாபாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்தியாவில் அதிகளவில் பட்டாசு விற்பனை செய்யப்படும் முக்கிய சந்தைகளில் டெல்லி சந்தையும் ஒன்று. சிவகாசியில் உள்ள 100&க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்கள் டெல்லிக்கு பட்டாசுகளை அனுப்பி வந்தது.
உற்பத்தி குறைப்பு
இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் போதிய பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கிறது. வெளி மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் தகவலால் பல பட்டாசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை பாதியாக குறைத்துக்கொண்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இந்த திடீர் மழையை பொதுமக்கள் வரவேற்றாலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே போதிய தொழிலாளர்கள் இல்லாமல் உற்பத்தி பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவில் பெய்யும் மழையால் காலையில் பட்டாசு உற்பத்தியை தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
அதேபோல் பகல் நேரங்களில் பெய்யும் திடீர் மழையால் உலர்த்தப்பட்ட பட்டாசுகள் வீணாகி வருவது உற்பத்தியாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ற வகையில் பட்டாசுகளின் விலையை ஏற்ற முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள்.
பல கட்ட பிரச்சினைகளை தாண்டி மக்களை மகிழ்விக்க சிவகாசி பட்டாசுகள் தயாராகி வருகிறது. இயற்கையும், அரசும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு அதரவாக இருந்தால் இந்த ஆண்டு தீபவாளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
Related Tags :
Next Story