நெல்லையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி


நெல்லையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 25 Sept 2021 2:09 AM IST (Updated: 25 Sept 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

நெல்லை:
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9&ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி நடைபெறுகிறது. 

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. 9 யூனியன்களுக்கும் அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் பயிற்சி வகுப்பு நடந்தது. பாளையங்கோட்டை யூனியனுக்கு அரசு சட்டக்கல்லூரியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வருகிற 29-ந்தேதி 2-வது கட்ட பயிற்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 5-ந்தேதி 3-ம் கட்ட பயிற்சியும், 9-ந்தேதி வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 8&ந் தேதி 3-ம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

நேற்று நடைபெற்ற பயிற்சி வகுப்பின்போது தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான படிவமும் வழங்கப்பட்டது. இந்த தபால் வாக்குகளை சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Next Story