100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
விக்கிரமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சுற்றி அணைக்குடி, அறங்கோட்டை, புதுப்பாளையம் போன்ற ஊர்கள் உள்ளன. ஸ்ரீபுரந்தான் ஊராட்சி 9 வார்டுகளை கொண்டதாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை இந்த ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கி, வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் போதிய நிதி ஒதுக்கி வேலை கொடுக்கும்படி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கேட்டும், அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி தலைவர் உலகநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீபுரந்தான் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், 100 நாள் வேலை கேட்டு கும்பகோணம்& அரியலூர் சாலையில் ஸ்ரீபுரந்தான் பஸ் நிலையம் அருகே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குணசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 100 நாள் வேலை உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் கும்பகோணம்&அரியலூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story