கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி


கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கடும் அமளி
x
தினத்தந்தி 25 Sept 2021 2:39 AM IST (Updated: 25 Sept 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.

பெங்களூரு: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியதை கண்டித்து கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.

கேள்வி நேரம்

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13&ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் இந்நாள்,முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 10-வது மற்றும் கடைசி நாள் கூட்டம் நேற்று காலை தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு பூஜ்ஜிய நேரம் எடுத்து கொள்ளப்படுவதாக சபாநாயகர் கூறினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் ரங்கநாத், தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி கையில் பதாகையுடன் சபாநாயகர் இருக்கையின் முன்பகுதிக்கு வந்தார். அவரை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்த கணேஷ், தனது தொகுதி பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி வழங்குமாறு கோரி சபாநாயகர் இருக்கையின் முன்பகுதிக்கு வந்தார்.

நாக்பூர் கல்வி கொள்கை

பிறகு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா எழுந்து பேசுகையில், “இந்த அரசு தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த கொள்கை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இந்த சபையில் விவாதம் நடத்தாமல் அந்த கொள்கையை அமல்படுத்தியது சரியல்ல. அதனால் அந்த கொள்கை குறித்து சபையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும்“ என்றார்.

அப்போது, தர்ணாவில் ஈடுபட்டிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது தேசிய கல்வி கொள்கை அல்ல, நாக்பூர் கல்வி கொள்கை, ஆர்.எஸ்.எஸ். கல்வி என்று கூறி முழக்கமிட்டனர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்களும் சபையில் ஒன்றுகூடி, காங்கிரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்கள், இது இத்தாலி கல்வி கொள்கை அல்ல, இந்திய கல்வி கொள்கை என்று முழக்கமிட்டனர். இதனால் சபையில் பரபரப்பு நிலவியது.

கொரோனா வைரஸ்

இதனால் சபையில் கடும் அமளி உண்டானது. இந்த அமளிக்கு இடையே பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, “இந்தியர்களின் நலனுக்காக, இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை. இது வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்ட கொள்கை அல்ல. காங்கிரஸ் அடிமை கல்வி கொள்கையை செயல்படுத்தியது. ஆனால் பா.ஜனதா சுயமரியாதை கொள்கையை செயல்படுத்துகிறது. இது மாணவர்களின் எதிர்காலம் கருதி, சர்வதேச அளவில் போட்டி போடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது “ என்றார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை பிடித்தப்படி தொடர்ந்து கூச்சலிட்டனர். இந்த கூச்சல்&குழப்பத்திற்கு மத்தியில் கொரோனா வைரஸ் குறித்த விவாதத்திற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சபாநாயகரின் அனுமதியுடன் பதிலளிக்க தொடங்கினார். காங்கிரசாரின் முழக்கத்தால் சுதாகர் என்ன பேசுகிறார் என்பது கேட்கவில்லை. 5 நிமிடங்கள் பேசிய சுதாகர், பிறகு தனது உரை அறிக்கையை சபையில் தாக்கல் செய்துவிட்டு பேச்சை முடித்து கொண்டார்.

தர்ணா போராட்டம்

இந்த அமளிக்கு மத்தியில் சபாநாயகர் காகேரி, கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சபை நடவடிக்ககள் குறித்த விவரங்களை அறிக்கையாக வாசித்தார். காங்கிரசாரின் தர்ணா போராட்டம் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அப்போது மீண்டும் பேசிய சித்தராமையா, “இந்த கூட்டத்தொடரில் தர்ணா போராட்டம் நடத்தக்கூடாது, மக்கள் பிரச்சினைகள் பேச வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். அதன்படி நாங்கள் கடந்த 10 நாட்களில் ஒரு நாள் கூட தர்ணா நடத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி விவாதித்தோம். சபை சுமுகமாக நடைபெற நாங்கள் ஒத்துழைப்பு வழங்கினோம். ஆனால் இந்த அரசு தேசிய கல்வி கொள்கையை அவசரகதியில் செயல்படுத்தி இருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம். அதை வாபஸ் பெற வேண்டும்“. அதன்பிறகு அவர் சபையை ஒத்திவைத்தார்.

குதிரை வண்டியில் சட்டசபைக்கு வந்த காங்கிரசார்

கர்நாடக சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்துகொள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரசார் குதிரை வண்டியில் வந்தனர். இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரசார் தா¢ணா போராட்டத்தை தொடங்கியபோது, சபாநாயகர் சித்தராமையாவை பார்த்து, “நீங்கள் இன்று (நேற்று) விதான சவுதாவுக்கு குதிரை வண்டியில் வந்தீர்களாமே. என்று கேட்டார். அதற்கு சித்தராமையா, “ஆமாம், பெட்ரோல்&டீசல் விலை உயர்ந்துவிட்டது. அதனால் என்ன செய்வது குதிரை வண்டியில் வந்தோம். பல்வேறு போக்குவரத்துகளில் குதிரை வண்டியும் ஒரு வகையான போக்குவரத்து தானே“ என்றார்.

Next Story