ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 3 பேர் படுகாயம்
பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
பெங்களூரு: பெங்களூரு அருகே ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது. துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.
பாய்லர் வெடித்து சிதறியது
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வட்டர பாளையா அருகே தொழிற்பேட்டை உள்ளது. அங்கு ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் நேற்று காலையில் வழக்கம் போல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் இருந்த பாய்லர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.
பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது.
இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் இருந்த 3 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதுபற்றி உடனடியாக அத்திபெலே போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 பேருக்கு தீவிர சிகிச்சை
அதே நேரத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தொழிற்சாலையில் பிடித்த தீ மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு படைவீரர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு தொழிற்சாலையில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாய்லர் வெடித்து சிதறியதால் 8 பேர் படுகாயம் அடைய நேரிட்டதாகவும், பாய்லர் வெடித்து சிதறியதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதுகுறித்து தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துர்நாற்றத்தால் மக்கள் அவதி
இந்த நிலையில். பாய்லர் வெடித்த பின்பு தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் வெளியேறி அப்பகுதி முழுவதும் பரவியது. அந்த ரசாயனத்தால் கடும் துர்நாற்றம் வீசியது. அந்த துர்நாற்றம் காற்றிலும் கலந்ததாக தெரிகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சுவாசிக்கும் போது துர்நாற்றம் வீசியதால், கடும் அவதிக்கு உள்ளானார்கள். துர்நாற்றம் காரணமாக தொழிற்சாலை அருகேயே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அத்திபெலேயில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள், வெடி விபத்து சம்பவங்கள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story