ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை
ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரவுடிகள் கைது
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும். ரவுடிகளின் அட்டகாசததை ஒடுக்க அனைத்து மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை நகரில் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் விடிய, விடிய ரவுடிகளை கைது செய்யும் பணிகள் போலீசார் மேற்கொண்டனர். அதில் ஒரே நாளில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் 25 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரவுடிகள் மீதான தீவிர நடவடிக்கையின் காரணமாக மதுரை நகரில் 235 ரவுடிகளில் குற்ற வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டன. அதில் 25 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் மதிச்சியம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஆழ்வார்புரத்தை சேர்ந்த ஜெயமுருகன்(வயது 19), வாசுதேவா(19), சுகுமார்(19), முகமதுஅலிப்கான்(19), ஸ்ரீதர்(19), சக்திபாண்டி(20) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சைவதுரை(27) என்பவரும் பிடிபட்டார். அவரிடம் இருந்து 3 அடி நீள வாள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுதவிர தலைமறைவு குற்றவாளியாக தேடப்பட்டு வந்த மகாலிங்கம் மகன் காக்காவலிப்பு கார்த்திக் (21) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆயுதங்கள்
மதுரை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் நேற்று சிறப்பு தணிக்கை நடைபெற்றது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒரு தனிப்படையும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேடுதல் வேட்டையில் 126 ரவுடிகளின் இருப்பிடங்கள் தணிக்கை செய்யப்பட்டது. அதில் 59 ரவுடிகளை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. அவர்களில் 9 ரவுடிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் 40 ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களிடம் இருந்து நன்னடத்தை கடிதம் பெறுவதற்கான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற சிறப்பு தணிக்கை தொடரும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்
Related Tags :
Next Story