நெல்லையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்; கனிமொழி எம்.பி. பங்கேற்பு
நெல்லையில் நடந்த தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் நேற்று மாலை நடந்தது.
கூட்டத்திற்கு தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மனோ தங்கராஜ், கீதாஜீவன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டக்கூடிய மற்றும் அனைத்து பத்திரிகைகளும் பாராட்டி எழுதக்கூடிய நல்லாட்சி தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்தோம். ஆனால் நம்முடைய முதல்-அமைச்சரின் திட்டமிடுதலும், அமைச்சர்களின் உழைப்பாலும் நோய்த்தொற்று குறைந்துள்ளது.
அ.தி.மு.க.வினர் கொரோனாவை காரணம் காட்டி, பொருட்கள் வாங்குவதற்கு பணத்தை அதிகளவில் செலவு செய்து அதிலும் ஊழல் செய்துள்ளனர். தமிழக மக்கள் இந்த ஆட்சியில்தான் நிம்மதியாக இருக்கிறார்கள். மக்களுக்கு எது தேவை என்பதை முதல்-அமைச்சர் சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்றால் அது உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் முடியும். எனவே உள்ளாட்சியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் முதல்-அமைச்சர் நினைப்பதையும், அவருடைய எண்ணத்தையும், அவர் போடுகின்ற நலத்திட்டங்களும் மக்களை சென்றடையும்.
தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். இந்த தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், Ôதி.மு.க. ஆட்சியில்தான் முதன்முதலில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தி.மு.க.வை பற்றியும், தி.மு.க. ஆட்சியை பற்றியும் பேச எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை கிடையாது. கூட்டுறவு சங்கங்களில் போலி நகைகளை வைத்து அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றி பெற்றுத்தர வேண்டும்Õ என்றார்.
கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story