டாஸ்மாக் கடை, கோவிலில் திருடிய 3 பேர் கைது
திருவேங்கடத்தில் டாஸ்மாக் கடை, கோவிலில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம்- ஆவுடையாள்புரம் ரோடு டாஸ்மாக் கடையில் கடந்த 22-ந்தேதி இரவில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 20 மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். மேலும் அங்குள்ள மாடசாமி கோவிலிலும் உண்டியலை உடைத்து பணத்தை திருடினர். இதுகுறித்த புகார்களின்பேரில், திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ உத்தரவின்பேரில், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகீர் உசேன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த இனாம் செட்டிகுளம் ஒத்தப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் பொன்ராஜ் (வயது 24), ராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் கோபிநாத் பிரபு (23), இனாம் செட்டிகுளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பால்பாண்டி (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து டாஸ்மாக் கடையிலும், கோவிலிலும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 4 மதுபாட்டில்கள், ரூ.1,000&ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story