கடம்பத்தூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்


கடம்பத்தூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Sept 2021 3:38 PM IST (Updated: 25 Sept 2021 3:38 PM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. ஏ.டி.எம். வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் உள்ளது. இதன் அருகே திருவள்ளூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இதன் வழியாக தினந்தோறும் திருவள்ளூர், பேரம்பாக்கம், மப்பேடு, காஞ்சீபுரம், சுங்குவார்சத்திரம், தக்கோலம், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர் என சுற்றுவட்டார பகுதிகளுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது.

ஆனால் இந்த ரெயில்வே கேட்டானது ரெயில்கள் வந்து செல்லும் போது அடிக்கடி திறந்து மூடுவதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், ரெயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வாக கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன ஓட்டிகள் எளிதாக கடக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என ரெயில் பயணிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இது சம்பந்தமாக கடம்பத்தூர் ரெயில் பயணிகள் சங்கத்தினர் பலமுறை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ரூ.14 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.

இதற்காக கடம்பத்தூரில் 17 கட்டிட உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. மேலும் அறநிலையத் துறையினர் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பணி கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய மேம்பால பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று தற்போது ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 90 சதவீதத்துக்கும் மேல் முடிக்கப்பட்டது. மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடம்பத்தூர் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் புதிதாக அமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ரெயில்வே கேட் அருகே பஸ் பயணிகள் நடைமேடை செல்வதற்கு வசதியாக படிக்கட்டுகள் அமைக்க வேண்டும், ரெயில் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி செய்து தரவேண்டும், நெரிசல் நேரங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story