தேனி மாவட்டம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அன்னிய செலாவணி ஈட்டுகிறது கலெக்டர் தகவல்
ஏற்றுமதி பொருட்கள் மூலம் தேனி மாவட்டம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அன்னிய செலாவணி ஈட்டுவதாக கலெக்டர் தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் தேனி மாவட்ட தொழில் மையம் சார்பில் நேற்று ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை கண்காட்சிக்காக வைத்திருந்தனர். இந்த கருத்தரங்கில் தொழில் முனைவோர் 17 பேருக்கு ரூ.20 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான மானியத் தொகையை கலெக்டர் முரளிதரன் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் இருந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி நூல் மெத்தை, தலையணைகள், அதற்கான உறைகள், ஆயத்த ஆடைகள், மசாலா பொடி, வாசனை பொருட்கள், காபி தூள் ஆகிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுபோல், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தேனியில் இருந்து சில உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ரூ.1,500 கோடி
ஏற்றுமதி பொருட்கள் மூலம் தேனி மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் ரூ.1,500 கோடி அன்னிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது. புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், புதிய தொழில் முனைவோர் அரசு திட்டங்களின் மூலம் பயன்பெற்று தேனி மாவட்டத்தை தொழில் வளர்ச்சியால் மேம்பட்ட மாவட்டமாக உருவாக்கவும், ஏற்றுமதி மையமாக உருவாக்கவும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் மற்றும் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story