சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் - கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்
சம்பா பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு 2021-22-ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 66 ஆயிரத்து 454 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இது கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத சாதனை அளவாகும். சம்பா பருவத்தில் இதுவரை 17 ஆயிரத்து 833 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்வதற்கான நாற்றங்கால் தயார் நிலையில் உள்ளது.
இதுவரை குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு 1,159 டன் நெல் விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. மத்திய கால நெல் விதைகள் 106 டன் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்திற்கு தேவையான யூரியா 3,622 டன்னும், டி.ஏ.பி. 1,974 டன்னும், பொட்டாஷ் 2,056 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 2,425 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த இந்த ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் இருந்து அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரபி சிறப்பு பருவத்தில் சம்பா(நெல்-11) சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.513 பிரிமீயம் செலுத்தி ரூ.34 ஆயிரத்து 175-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய நவம்பர் 15-ந் தேதியாகும்.
கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை விரைவில் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கு தஞ்சை மண்டலத்துக்கு பயிர்க்கடன் இலக்காக ரூ.352 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் இதுவரை ரூ.82 கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடப்பு ஆண்டு 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் சாதாரண வரிசை திட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை பதிவு செய்த 2,067 மின் இணைப்பு வழங்கப்படும். சுயமுதலீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை பதிவு செய்த 1,513 மின் இணைப்புகள் வழங்கப்படும். தட்கல் திட்டத்தின் கீழ் தொகை செலுத்தி மின் இணைப்பு கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story