முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்


முத்துநகர் கடற்கரையை சுத்தம் செய்த மாணவர்கள்
x
தினத்தந்தி 25 Sept 2021 10:07 PM IST (Updated: 25 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை மீன்வளக் கல்லூரி மாணவ-மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:
சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை மீன்வளக் கல்லூரி மாணவ& மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கடலோர தூய்மை தினம்

கடலில் ஏற்படும் மாசுகள் 80 சதவீதம் நிலத்தில் வாழும் மக்களால் ஏற்படுகின்றன. ஒரு ஆண்டில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் வந்து சேர்வதால் மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஆண்டுக்கு ஒரு மில்லியன் கடற்பறவைகள் மற்றும் ஒரு லட்சம் கடல் வாழ் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே கடற்கரையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கடல் பகுதியில் தேவையற்ற குப்பைகளை கொட்ட கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கடலோர தூய்மை தினம் கடந்த ஒரு வார காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள்

இந்த சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி நேற்று டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மீன்வளக் கல்லூரி மாணவ- மாணவிகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியை மீன்வளக் கல்லூரி முதல்வர் சாந்தகுமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட உதவி கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் கடலோரப் பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சென்றவர்களிடம் மாணவ-மாணவிகள் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். 

Next Story