கலிஞ்சிக்குப்பம் ஆதிதிராவிட மக்கள், கலெக்டரிடம் மனு ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு


கலிஞ்சிக்குப்பம் ஆதிதிராவிட மக்கள், கலெக்டரிடம் மனு ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 25 Sept 2021 10:47 PM IST (Updated: 25 Sept 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து இருப்பதாக கலிஞ்சிக்குப்பம் ஆதிதிராவிட மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனா்.

விழுப்புரம், 

கண்டமங்கலம் ஒன்றியம் கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கலிஞ்சிக்குப்பம் கிராமத்திற்கு சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு உள்ளாட்சி தேர்தல் ஆரம்பித்த காலத்திலிருந்தே இதுதான் முதல் முறையாகும்.

 கடந்த 50 ஆண்டு காலத்திற்கு பிறகு தாழ்த்தப்பட்ட எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக வரக்கூடாது என்ற எண்ணத்தோடு சிலர், முன்கூட்டியே ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து தாழ்த்தப்பட்டோர் என சாதிச்சான்றிதழ் பெற்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,

 பிற்படுத்தப்பட்டோர் பகுதியிலேயே வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். ஏனெனில் அவர்கள் பெரும்பான்மையான வாக்காளர்களை கொண்டுள்ள பகுதியில் உள்ளனர். 

இதுபோன்று எங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தட்டிப்பறித்தால் நாங்கள் எப்போது முன்னேற முடியும். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது மட்டுமின்றி எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடமே ஒப்படைப்போம் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

 மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறினார்.





Next Story