விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின


விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 26 Sept 2021 12:23 AM IST (Updated: 26 Sept 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பலத்த மழை பெய்ததால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தாராபுரத்தனூரில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

கரூர், செப்.26-
பலத்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் மழை பெய்தது. இந்த மழை சில பகுதிகளில் கனமழையாகவும் சில பகுதிகளில் லேசான மழையாகவும் இருந்தது. குளித்தலையில் அதிகபட்சமாக 82 மில்லி மீட்டரும், கடவூரில் 58 மி.மீ., கரூரில் 57 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் கடவூர் மற்றும் பாலவிடுதி பகுதிகளில் வறண்டு கிடந்த குளங்கள் மற்றும் குட்டைகளில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மாவத்தூர், வரவணை, உடையாபட்டி குளங்கள் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
தரைப்பாலம் மூழ்கியது
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட தாராபுரத்தனூரில் 500 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரின் நுழைவுவாயிலில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக கோவக்குளம் ஏரிக்கு தண்ணீர் செல்லும். நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இந்த தரைப்பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சின்ன சேங்கல் குளம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், மூலிமங்கலம், பழமாபுரம், கொங்கு நகர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. 
விவசாய பயிர்கள் மூழ்கின
லாலாபேட்டையை சுற்றியுள்ள கள்ளபள்ளி, கருப்பத்தூர், பிள்ளபாளையம், மகிழிபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
குளித்தலை சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பல இடங்களில் வாழை, நெல் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தன. பின்னர் படிப்படியாக நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியத் தொடங்கியது. குளித்தலை அருகே உள்ள மருதூர், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியவில்லை. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமாரமங்கலம் பகுதியில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த மண் சாலையை பொக்லைன் எந்திரங்களை வைத்து அகற்றி தண்ணீர் வடியும் வகையில் துரிதமான பணியில் ஈடுபட்டனர். இதன்பிறகு அப்பகுதியில் நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடியத் தொடங்கியது. மழையில் குளித்தலை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்கள் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து குளித்தலை தாசில்தார் விஜயா, வருவாய் ஆய்வாளர் துரைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Next Story