எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் காங்கிரசார் மோதல்; நாற்காலிகள் வீச்சு
தேவகோட்டையில் காங்கிரஸ் அலுவலகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் காங்கிரசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் காங்கிரஸ் அலுவலகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் காங்கிரசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். நாற்காலிகள் வீசப்பட்டன. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
காங்கிரசார் மோதல்
சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம், தேவகோட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு நேற்று வந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருமாணிக்கம் மற்றும் தேவகோட்டை நகர, வட்டார, கண்ணங்குடி வட்டார நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.
அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் உள்கட்சி பிரச்சினை சம்பந்தமாக நிர்வாகிகள் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது பல நிர்வாகிகள் ஒரே நேரத்தில் பேசியதால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர், செருப்பு வீசியவரை பிடித்து தாக்கியதால், அங்கிருந்த சிலருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் கோஷ்டி மோதலாக மாறியது. நாற்காலிகள் வீசப்பட்டன. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
4 பேர் படுகாயம்
இதில் 2 பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகளை அலுவலகத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகம் முழுவதும் நாற்காலிகள் உடைக்கப்பட்டு சிதறி கிடந்தன. இதற்கிடையே மோதல் தொடங்கிய சற்று நேரத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கே.ஆர்.ராமசாமி மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆகிய 4 பேரையும் கட்சியிளர் அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தேவகோட்டையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது
Related Tags :
Next Story